கஞ்சமலை சித்தேசுவரசாமி கோவிலில் இன்று சித்ரா பவுர்ணமி விழா
கஞ்சமலை சித்தேசுவரசாமி கோவிலில் இன்று சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது.
சேலம் அருகே கஞ்சமலை சித்தேசுவரசாமி கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது. இதில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த அதிகாரிகளுடான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் தலைமை தாங்கினார். இதில் உள்ளாட்சித்துறையின் சார்பில் மலையேறுபவர்களுக்கு ஆங்காங்கே தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறித்தும், சுகாதாரத்துறையின் சார்பில் கோவிலின் மலை அடிவாரம் மற்றும் மேற்புறத்தில் தற்காலிக மருத்துவ முகாம்கள், 108 ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் பேசும் போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் வயதானவர்கள் மற்றும் உடல் நலக்குறைபாடுகள் உள்ளவர்கள் பாதுகாப்பு நலன் கருதி மலையேறுவதை தவிர்க்க வேண்டும். காய்ந்த புற்கள் அதிகம் உள்ளதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம். இந்த பணிகளை வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையின் சார்பில் அலுவலர்களை பணியமர்த்தி கண்காணிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் தாசில்தார் மாதேஸ்வரன், இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதா, மின்சார வாரிய உதவி பொறியாளர் ரமேஷ், செயல் அலுவலர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.