இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் - அமைச்சர்
மதவாத அரசியலில் இருந்தும், ஊழல் அரசியலில் இருந்தும் மக்களை காக்க, இந்தியா கூட்டணி சார்பில், தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் ச.முரசொலிக்கு வாக்குகள் கேட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம், ஆவணம், பேராவூரணி நகரம், சொர்ணக்காடு கடைத்தெரு, நெல்லியடிக்காடு, பெருமகளூர், செந்தலை வயல், குருவிக்கரம்பை, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, தற்போது நடைபெற்று வரும் தேர்தல் ஒன்றிய அளவில் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நடத்தப்படுகின்ற தேர்தல், தமிழக முதலமைச்சர் சொன்னது போல், இது வெறும் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, இரண்டாவது சுதந்திரப் போர். இந்த போராட்டம் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கக்கூடிய போராட்டம். தமிழக முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு போட்ட முதல் கையெழுத்து, பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக இலவச பேருந்து பயணத்திட்டத்திற்கான கையெழுத்துதான், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் யார் யாருக்கெல்லாம் கிடைக்கவில்லையோ, தேர்தல் முடிந்த கையோடு அவை சரிபார்க்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும்.
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு 2,500 சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்து, புதிதாக 70 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி ஏறத்தாழ, 12 லட்சம் சுய உதவி குழுக்கள் தமிழ்நாட்டில் இருப்பதற்கு காரணமானவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள். ஒன்றியத்திலே மோடி ஆட்சியை அகற்றிவிட்டு, அங்கு சகோதரர் ராகுல் காந்தி பிரதமராக அமரும்போது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை தற்போது 900, 1000, 1200 என விற்கப்படுகிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்போது சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு மீண்டும் வழங்கப்படும்.
தற்போது 95 ரூபாய் 105 ரூபாய் விற்கப்படும் டீசல், பெட்ரோல் விலை 65, 75 க்கு வழங்கப்படும். மோடி ஆட்சியிலே பெட்ரோல் டீசல் விலை உயரும்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் 100 டாலருக்கு விற்பதாகச் சொன்னார். தற்போது 65 டாலருக்கு ரஷ்யாவிடம் விலை மலிவாக வாங்கும் போதும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத காரணம் என்ன, இதன் பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் யாருக்கு போய் சேர்கிறது. அம்பானி அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடி வாங்கிய கடனை தள்ளுபடி செய்த மோடி அரசாங்கம் ஏழை, எளிய மக்கள் என்று வரும் போது மட்டும் ஏன் இவ்வளவு யோசனை, ஒரு சில பெரிய முதலாளிகள் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கின்ற மோடி அரசாங்கத்தை மாற்ற வேண்டிய நிலையில் தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை எளிய பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும். விவசாயிகள் வாங்கியுள்ள விவசாயக் கடன்கள், மாணவர்கள் வாங்கியுள்ள கல்விக் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகள் எல்லாம் அகற்றப்படும். தப்பித் தவறி மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வாக்குச்சாவடிகள் எல்லாம் அகற்றப்படும். தேர்தல் என்பதே இருக்காது. ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கட்சி என்ற நிலை ஏற்படும். இவ்வளவு நாள் கட்டி காத்த ஜனநாயகம் வீழ்த்தப்பட்டு, ஒற்றை ஆட்சி முறை கொண்டு வரப்படும். பொதுமக்கள் எல்லாம் வாக்குச்சாவடிக்கு செல்லும் போது வாக்கு சின்னத்திலே இரண்டாவது இடத்திலே வேட்பாளர் முரசொலியின் பெயர், உதயசூரியன் சின்னம் இடம்பெறும். அதற்கு நீங்கள் எல்லாம் வாக்களிக்க வேண்டும்.
தேர்தலுக்குப் பின்பு இரண்டாம் இடத்தில் இருக்கும் முரசொலி முதலாம் இடத்திலே இருப்பார். தமிழக முதல்வரும், சகோதரர் ராகுல் காந்தியும், சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் போல இந்த நாட்டை காக்க முன்களத்தில் நின்று போராடி வருகின்றனர்" இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரச்சாரப் பயணத்தில்,தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநிமாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், கா. அண்ணாதுரை, நா.அசோக்குமார் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.