பேரிடர் பாதிப்புகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்
பேரிடர் பாதிப்புகள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 17.5.2024 முதல் 19.5.2024 வரை பலத்த மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய தயார் நிலை பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 17.5.2024 முதல் 19.5.2024 வரை பலத்த மழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், பாதிப்பு ஏதும் ஏற்பட்டால் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையானது துவங்கவுள்ளதால், அதிக மழை பொழியும்பட்சத்தில் அதனால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலும், இழப்புகளைக் குறைக்கும் நோக்கத்திலும் சரியாகத் திட்டமிட்டு பேரிடர் முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெய்த மழையின் அடிப்படையில் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகும் (High Vulnerable) இடங்களாக 4 இடங்கள், மிதமாக பாதிப்பிற்குள்ளாகும் (Medium Vulnerable) இடங்களாக 28 இடங்கள், குறைவாக பாதிப்பிற்குள்ளாகும் (Low Vulnerable) 1 இடம் என மொத்தம் 33 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேற்படி, கனமழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் என அடையாளம் காணப்பட்ட இடங்களில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள முதல் பொறுப்பாளர்களாக (First Responders) நாமக்கல் மாவட்டத்தில் 99 பெண் பொறுப்பாளர்கள், 231 ஆண் பொறுப்பாளர்கள் என மொத்தம் 330 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிக பாதிப்புக்குள்ளாகும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் தப்பிச் செல்லக் கூடிய வழிகள் மற்றும் நிவாரண இடங்கள் ஆகிய விவரங்களுடன் ஒரு டிஜிட்டல் வரைபடம் தயார் நிலையில் இருக்க வேண்டும். கிராம அளவில் முதல் பொறுப்பாளர்களின் பட்டியல் தயார் செய்து அவர்களின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண் விபரங்களை புதுப்பித்து தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். உயர் மின்விளக்குகள், மோட்டார் பம்பு செட்டுகள், டீசல் மின்னாக்கி ஆகியவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். பேரிடர் காலங்களில் இடிந்து விழும் கட்டிடங்களை அப்புறப்படுத்த பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மழை, சூறை காற்றினால் சாலையில் விழும் மரங்களை அப்புறப்படுத்த தேவையான அறுவை இயந்திரங்கள், ஜே.சி.பி (JCB) வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவேண்டும். Vulnerable Area பகுதிகளில் ஆறுகள் மற்றும் கால்வாய்களை தூர் வாரி அதன் முழு அகலத்திற்கும் நீர் வழிப்பாதை உள்ளதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். நிவாரண மையங்களில் தங்க வைக்க திட்டமிட்டுள்ள நபர்களுக்கு போதுமான இடவசதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதி, உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். மின்னாக்கி மற்றும் மின்விளக்கு வசதிகள், டீசல் மின்னாக்கிக்குத் தேவையான டீசல் இருப்பு ஆகியவற்றை உறுதி செய்துக்கொள்ளவேண்டும். நிவாரண மையங்களில் உள்ளவர்களுக்குத் தேவையான ஊசி மருந்துகள், மாத்திரைகள் மற்றும் அவசர தேவைக்கு அவசர ஊர்தி ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை உள்ளிட்ட வார்டுகளில் தடையற்ற மின்சாரம் உள்ளதை உறுதி செய்துக்கொள்ளவேண்டும். போதுமான அளவு ஆக்சிஜன் உருளைகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ளவேண்டும்.
பேரிடர் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளும் மாநில பேரிடர் மீட்புப்படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மத்திய குழுக்கள், முகமைகள் (Central Agencies) ஆகியோர் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்க்கும் பகுதிகளில் கால்நடை நிவாரண மையங்கள் அமைக்க திட்டமிடவேண்டும். கால்நடைகளுக்குத் தேவையான ஊசி, மருத்துகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் / தண்ணீர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள் மழை காலங்களில் குடிநீரை குளோரினேசன் செய்து வழங்க வேண்டும். மேலும் உள்ளாட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்களில் எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ஒலிப்பெருக்கி அமைப்புகளை நிறுவ வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் கிராமப்புறசாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் மழைகாலங்களில் மரங்கள் விழுந்தால் அகற்றிட தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்புத் துறையின் சார்பில் ஆற்றோரங்கள் மற்றும் வெள்ள நீரினால் பாதிக்கப்பட கூடிய இடங்களில் அவசர கால செயல்பாடு குறித்த (Mock drill) ஒத்திகை நடத்த வேண்டும். மின்சாரவாரியம் அலுவலர்கள், பருவமழைக்காலத்தில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மின்சார இடையூறுகளை பழுது பார்க்க 24 மணிநேரமும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து தென்மேற்கு பருவமழை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தன்னார்வத்துடன் பணியாற்ற வேண்டும். பேரிடர் மேலாண்மை குழுக்களில் இடம் பெற்றுள்ள அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று முதன்மை பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தென்மேற்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மூலம் 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் TNSMART என்ற செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து மழைகுறித்த பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ச.கலாநிதி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்த்திபன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.அ.ராஜ்மோகன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.க.பூங்கொடி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.சி.நாராயணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் த.முத்துராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பாலகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திருகுணா, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.