தக்காளி விலை சரிவு
வரத்து அதிகரிப்பால் சேலம் உழவர் சந்தையில் தக்காளி விலை குறைந்தது.
சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, தாதகாப்பட்டி மற்றும் புறநகரில் எடப்பாடி, ஜலகண்டாபுரம், ஆத்தூர், இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, மேட்டூர் உள்பட 13 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்காக பெய்த கனமழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் அதன் விலை கணிசமாக உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.72 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் தற்போது மழை பெய்யாததால் உழவர் சந்தைகளுக்கும், தினசரி மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கிலோ ரூ.60, 50 என குறைந்து வந்தது. இந்நிலையில், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை ஆகிய உழவர் சந்தைகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.46-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவால் தக்காளிகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். மேச்சேரி, வாழப்பாடி, ஆத்தூர், ஏத்தாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்ததால் அதன்விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.