திருப்பூரில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு
திருப்பூரில் வரத்து குறைவால் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தினசரி மார்க்கெட்டிற்கு பல்லடம், வதம்பச்சேரி, பொங்கலூர், தாராபுரம், குண்டடம், படியூர், காங்கேயம் மற்றும் திருப்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து தக்காளி அதிக அளவில் கொண்டுவரப்படுகிறது. ஆனால் மழை காரணமாக கடந்த சில தினங்களாக மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அடியோடு குறைந்துள்ளது.
வழக்கமாக தினமும் சுமார் 2000 பெட்டி தக்காளி வரும் நிலையில் தற்போது வெறும் 100 பெட்டிகள் மட்டுமே உள்ளூர் வரத்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தற்போது தக்காளி கொண்டுவரப்படுகிறது. வரத்து குறைவால் இதன் விலை திடீரென உயர்ந்துள்ளது.
வழக்கமாக 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ. 200 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்படும் நிலையில் தற்போது ரூ.400 விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 28 கிலோ பெட்டி ரூ. 400 முதல் ரூ. 600 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ரூ. 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு மொத்த விற்பனை விலை உயர்ந்துள்ளதால் கடைகளில் சில்லறை விற்பனையில் ரூ. 25க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி ரூ. 40க்கு விற்பனை செய்யபடுகிறது. தற்போது பிற மாநிலங்களிலும் மழை பெய்து வருவதால் வரும் நாட்களில் வரத்து குறைந்து விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்....