மருத்துவர்கள் முன்னிலையில் காளைகள் சித்திரவதை
எருது விடும் விழா
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நம்பர் 1 கொத்தூர் கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக மயிலர் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ஆந்திரா மாநில சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடின.
இந்த நிலையில் காளைகளின் உரிமையாளர்கள் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடிகளில் காளைகள் ஓட வேண்டும் என்பதற்காக பரிசு வெல்லும் நோக்கத்தில் மாடுகள் ஓட காளைகளின் வயிற்று பகுதியில் கயிற்றால் இறுக்க கட்டியும் அதேபோல் ஆசனவாயில் கடுமையான வலி ஏற்படுத்தக் கூடிய வகையில் கைகளை உள்ளே விட்டும் வால் பகுதியில் கிளிப் போட்டும் காளைகளை துன்புறுத்தும் வகையில் செயல்பட்டதை அங்கிருந்த துறை சார்ந்த அதிகாரிகளும் கால்நடை மருத்துவ குழுவும் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த நேரத்திற்கு மேல் மதியம் 2 மணியை கடந்தும் எருது விடும் திருவிழா நடைபெற்றது. மேலும் இந்த எருது விடும் திருவிழாவில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக 60 ஆயிரம் ரூபாய் முதல் கடைசி பரிசாக 1500 ரூபாய் வரை என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் காளைகள் துன்புறுத்தப் படுவதை துறை சார்ந்த அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.