சுற்றுலா பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா: அமைச்சர் எம்பி பங்கேற்பு
சுற்றுலா பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா: அமைச்சர் எம்.பி பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், கார்கூடல்பட்டி ஊராட்சி, பிலிப்பாக்குட்டை, பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,அவர்கள் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் முன்னிலையில், சுற்றுலா பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா 2024 சிறப்பாக கொண்டாடப்பட்டது. வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் பேசியதாவது, தமிழ்நாட்டில் தமிழர்களின் மரபு, பண்பாடு, கலாச்சார வழியில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தைத் திருநாள், தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைவரும் சிறப்பாக பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000/- , வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளார்கள். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், எல்லோருக்கும் எல்லாம் என ஒவ்வொருவரின் வளர்ச்சியும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு, மகளிருக்கு மாதம் ரூ.1000/- வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டம், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவுத்திட்டம், புதுமை பெண் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். கடந்த 10 ஆண்டுகளாக கொண்டுவரப்படாத திட்டங்கள் அனைத்தும் இந்த இரண்டரை ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளார்கள். நானும், மாநிலங்களவை உறுப்பினரும் என அனைவரும் இணைந்து இந்த நாமக்கல் மாவட்டத்தை முன்னேற்றும் அளவிற்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். இராசிபுரம் தொகுதிக்கு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூட்டு குடிநீர் திட்டம், இராசிபுரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை, நாமகிரிப்பேட்டையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், தொழில் நுட்ப பூங்கா அமைத்தல் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம் சுற்றுலா பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உருவாக்கிய சமத்துவ புரத்தில் கொண்டாடுவது என்பது சிறப்புமிக்க ஒன்றாகும். சுற்றுலா பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு, பல்வேறு சமுகத்தை சேர்ந்த 20 -க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தங்கவேல், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் மா.பிரியா, மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.கோகிலா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரா. இளையராஜா, மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் மு.அபராஜிதன், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story