சுட்டெரிக்கும் வெயிலால் பகல் நேரத்தில் வெறிச்சோடும் சுற்றுலா மையங்கள்

சுட்டெரிக்கும் வெயிலால் பகல் நேரத்தில் வெறிச்சோடும் சுற்றுலா மையங்கள்

கன்னியாகுமரி 

குமரியில் சுட்டெரிக்கும் வெயிலால் பகல் நேரத்தில் வெறிச்சோடும் சுற்றுலா மையங்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை 9 மணியளவிலே வெளியே நடமாட முடியாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மதியம் 12 மணியில் இருந்து 2 மணி வரை வெப்ப தாக்குதலால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையான தற்போது தமிழகம், கேரளா, மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை புரிகின்றனர். ஆனால் வெயிலின் தாக்கத்தால் பகல் நேரத்தில் கன்னியாகுமரி உட்பட சுற்றுலா மையங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். மாலை 5 மணிக்கு பின்னரே கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், மற்றும் பிற சுற்றுலா மையங்களிலும், திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற மையங்களுக்கும் சென்று வருகின்றனர். பகல் நேரங்களில் சுற்றுலாவிற்கு வந்தவர்கள் தங்கும் விடுதிகளிலேயே தஞ்சம் அடைகின்றனர். கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்லும் சுற்றுலா பயணிகள் மண்டபத்திற்குள் இருப்பதையே விரும்புகின்றனர். விவேகானந்தர் பாறையின் வெட்டவெளி பகுதிகளில் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்ப தாக்கம் அதிகமாக இருப்பதால் பாறை பகுதிகளில் சுற்றுவதை தவிர்த்து வருகின்றனர். இதைப்போன்றே கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், கடற்கரை பகுதி, சூரிய அஸ்தமன பகுதி, வட்டக்கோட்டை போன்ற பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் பகலில் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. காலை மாலை வேளைகளில் கன்னியாகுமரி சுற்றுலா மையங்கள் பரபரப்பாக காணப்படுகின்றன. இதைப்போல் சனி, ஞாயிறு நாட்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தாலும் பகலில் வெளியே சுற்றி பார்ப்பதை தவிர்க்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் தங்கும் கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் ஏசி உள்ள அறைகள் நிரம்பி வழிகின்றன.

Tags

Read MoreRead Less
Next Story