நாகர்கோவில் ரயிலில் இருந்து குதித்த சுற்றுலா பயணி பலி

நாகர்கோவில் ரயிலில் இருந்து குதித்த சுற்றுலா பயணி பலி
பைல் படம்

மத்தியபிரதேச மாநிலம் கோந்தாரி பச்சோகர் பகுதியை சேர்ந்தவர் ராம் சுஷில் திவாரி (70). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமார் 35 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் நேற்று காலையில் சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் காட்சியை பார்த்து விட்டு கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.

மதுரை செல்லும் ரயிலுக்காக நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்தில் காத்திருந்தனர். புனலூரில் இருந்து இரவு 10.50 மணிக்கு ரயில் வரும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதலாவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ரயிலில் ராம் சுஷில் திவாரி கழிவறைக்கு செல்வதற்காக ஏறினார். கழிவறைக்கு சென்று விட்டு அவர் இறங்குவதற்குள் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இதையடுத்து அவர் ரயிலில் இருந்து குதித்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ராம் சுஷில் திவாரி ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்தார். தவறி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிணமாக கிடந்த ராம் சுஷில் திவாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story