லாரி மீது சுற்றுலா வேன் மோதி விபத்து - 18 பேர் காயம்

ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட் மேம்பாலத்தில் முன்னால் சென்ற லாரியின் மீது சுற்றுலா வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 18 பேர் காயமடைந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலவாடி பகுதியைச் சேர்ந்த 21 பேர் சுற்றுலா வேனில் ராமேஷ்வரம் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் 18 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதில், முனிராஜ், அமுதா, சின்ன பையன் ஆகிய 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், சேலம் தனியார் மருத்துவமனை காவேரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். மீதமுள்ளவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். இங்கே இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், டிராவல்ஸ் வாகன ஓட்டுனர் தூக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தால் அதிகாலையில் சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் பொக்லின் இயந்திரம் கொண்டு வாகனத்தை இழுத்துச் சென்றனர்.

Tags

Next Story