கொல்லிமலையில் வீட்டில் புகுந்த சுற்றுலா வேன்

சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில் மகாமணி, 43. என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் வீட்டின் முன்புறம் ஜீஸ் கடை நடத்தி வருகிறார். சென்னை ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் போலீசார் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கடந்த 20ம் தேதி, 3 டெம்போ டிராவலர் போலீசார் வாகனத்தில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சீக்குப்பாறை வியூபாயிண்ட், எட்டிக்கையம்மன் கோவில், அரப்பளீஸ்வரர் கோவில், நம் அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றிபார்த்து ரசித்தனர். நேற்று காலை கொல்லிமலையில் இருந்து சென்னைக்கு செல்ல 3 டெம்போ டிராவலர் போலீஸ் வாகனங்கள் புறப்பட்டது.

டிரைவர் வீரரகுபதி. 35. என்ற போலீசார் ஓட்டி வந்த வாகனம் கொல்லிமலை அடிவாரம் காரவள்ளிக்கு அருகே வரும் போது, கொண்டை ஊசி வளைவில் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது, பின் மகாமணியின் வீட்டில் புகுந்து விபத்து ஏற்பட்டது. வேனில் பயணம் செய்த 14 பேரும் லேசான காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்தில் மகாமணியின் வீட்டில் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

சம்பவம் குறித்து டி.எஸ்.பி., தனராசு, நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், எஸ்.ஐ., கள் பிரியா, சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின் சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் காரவள்ளி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story