பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன் - 20 பேர் காயம்
விபத்துக்குள்ளான வேன்
சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை பகுதியை சேர்ந்த 20 பேர் நேற்று சுற்றுலா வேனில் ஏற்காட்டிற்கு வந்தனர். அவர்கள் ஏற்காட்டில் பல்வேறு இடங்களை சுற்றிபார்த்துவிட்டு மதியம் 1.30 மணி அளவில் அதே வேனில் ஏற்காட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். மலைப்பாதையில் ஏற்காடு அடிவாரம் முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்குள்ள சாலையில் இருந்த தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், சுற்றுலா வேனில் இருந்த 17 பேர் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக அங்கு சென்று வேனில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் கன்னங்குறிச்சி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில், படுகாயம் அடைந்தவர்கள்
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பாலாஜி, லோகேஷ், கிரண், பிரவீன், குருமூர்த்தி, கணேஷ், அஜித்குமார், சூர்யா உள்பட 17 பேர் என தெரியவந்தது. மேலும், 3 பேர் லேசான காயம் அடைந்ததால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் சுற்றுலா வேன் வளைவில் திரும்பும்போது எதிர்பாராமல் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.