சுற்றுலா வாகனம் விபத்து : 30 பேர் படுகாயம் 7 வயது சிறுவன் பலி
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைச்சாலையில் உதகைக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய சுற்றுலா வாகனம் கவிழ்ந்த விபத்தில் முப்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சென்னை வியாசர்பாடி பெரம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு குழுவாக 16 பெரியவர்கள் 15 குழந்தைகள் மற்றும் என 31 பேர் கடந்த 30 ம் தேதி நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு 1ம் தேதி மேட்டுப்பாளையம் வந்தடைந்துள்ளனர்.
ஏற்கனவே ஆன்லைன் மூலம் பதிவு செய்த சுற்றுலா வாகனத்தில் (மினி பேருந்து) உதகைக்கு சென்றுள்ளனர்.ஊட்டியை சுற்றி பார்த்து விட்டு மாலை 5 மணியளவில் ஊட்டியில் இருந்து தாங்கள் வந்த சுற்றுலா வாகனத்தில் மேட்டுப்பாளையம் திரும்பியுள்ளனர்.சுமார் 7 மணியளவில் வாகனம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் பவானிசாகர் அணை காட்சி முனை அருகே வந்த போது சுற்றுலா வாகனம் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உள்பட 32 பேரும் பலத்த காயமடைந்தனர்.விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்கள் ஒவ்வொருவராக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.
படுகாயமடைந்த 6 பேருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீதமுள்ள குழந்தைகள் பெண்கள் உள்பட இருபதைந்திற்கும் மேற்பட்டோருக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 7 வயது சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.