விவேகானந்தர் நினைவு தியான மண்டபத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
விவேகானந்தர் நினைவு தியான மண்டபத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கன்னியாகுமாரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் மோடி மூன்று நாட்கள் தியானம் செய்தார். இதனால் விவேகானந்தா மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தின் புகழ் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. அவர் தியானம் இருந்த தியான மண்டபத்தில் தியானம் செய்வதற்காக இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த தியான மண்டபத்தில் ஒரே நேரத்தில் 50 பேருக்கு மேல் அமர்வதற்கான இட வசதி இல்லை. அப்படிப்பட்ட புகழ்பெற்ற தியான மண்டபத்தின் உட்புறப் பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதற்குள் ஓம் என்ற சின்னம் மட்டும் உள்ளது.
இந்த ஓம் என்ற சின்னம் மட்டும் மின்விளக்கினால் ஜொலிக்கிறது. இந்த தியான மண்டபத்தில் எப்போதும் ஓம் என்ற ரீங்காரம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த மண்டபத்தில் இருப்பவர்கள் சத்தம் போடாமல் அமைதியான முறையில் தியானம் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இதை தொடர்ந்து இந்த மண்டபத்தில் ஆழ்ந்த தியானத்தை கலைக்க கூடாது என்பதற்காக தியான மண்டபத்துக்குள் சுற்றுலா பயணிகள் அழைத்து வரும் கைக்குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை.
காரணம் கைக்குழந்தைகள் சத்தம் போடுவதாலும் அழுவதாலும் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தியான மன்றத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் கை குழந்தைகளுடன் தியான மண்டபத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள் தியான மண்டபம் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.