தொடர் விடுமுறையையொட்டி பூலாம்பட்டி கதவணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்.
சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கப்பட்டு, நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அணைப்பகுதியில், சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டையையும் இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. இக்கதவணைப் பகுதியில் நிலவும் இயற்கைச் சூழலையும், ரம்யமான காட்சிகளை ரசிக்கும் நோக்கில், இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.இந்நிலையில் ஆயுத பூஜை நாளில் தற்போது தொடர் விடுமுறை காரணமாக, பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். குறிப்பாக அவர்கள் நீர் மின் உற்பத்தி நிலையம், கதவணை மேம்பாலம், மதகு பகுதி, நீர் உந்து நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும், காவிரியின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள இயற்கை அழகையும் கண்டு ரசித்தனர். அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் கதவணை நீர் பரப்பில் விசைப்படகு சவாரி செய்தும், அங்கு கிடைக்கும் ருசி மிகுந்த மீன் உணவுகளை ருசித்தும் பொழுதை கழித்தனர். மேலும் விடுமுறை தினத்தை ஒட்டி இப்பகுதியில் உள்ள கைலாசநாதர் திருக்கோயில், காவிரித்தாய் சன்னதி, காவிரி கரையோரத்தில் பிரம்மாண்ட நந்திகேஸ்வரர் ஆலயம், காவிரி படித்துறை விநாயகர் கோயில் உள்ளிட்ட திருத்தலங்களிலும் வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில், இப்பகுதியில் காவல் துறையினர் கூடுதலான எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.