விடுமுறை நாளையொட்டி மேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மேட்டூருக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இருந்தனர். அவர்களில் ஒரு சிலர் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணித்து கொள்வதற்காக மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகில் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். ஒரு சிலர் ஆடு, கோழி பலியிட்டு முனியப்ப சாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தாங்கள் சமைத்த உணவை பூங்காவுக்கு எடுத்து சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து உணவு உண்டு மகிழ்ந்தார்கள். சிறுவர் சிறுமிகள் ஊஞ்சல் போன்ற விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர். ஒரு சிலர் அணையின் வலது கரை பகுதியில் அமைந்துள்ள பவள விழா கோபுரத்திற்கு சென்று அணையின் முழுமையான தோற்றத்தினை கண்டுகளித்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் மேட்டூர் பூங்கா, காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காட்சியளித்தது.