குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

சீசன் தொடங்கியதால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.


சீசன் தொடங்கியதால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் சீசன் களை கட்டும் . அப்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவர். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளுக்கு குளிக்க வருவர்.

இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருவதோடு அவ்வப்போது சாரல் மழையும் பெய்து 'குளு குளு' சீசன் நிலவுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலையில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி மற்றும் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது .

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை ஒலி கருவியை பயன்படுத்தி அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை போலீசார் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர். இருப்பினும் சிறிது நேரத்தில் மீண்டும் தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளிக்க தொடங்கினர். இன்று காலையில் ஐந்தருவி மற்றும் மெயின் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆர்வமுடன் குளித்தனர்.அருவிகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அவர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு பகுதி, பகுதியாக குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அருவிக்கரையில் போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags

Next Story