வயலில் நிறுத்தியிருந்த டிராக்டர் திருட்டு: விவசாயி அதிர்ச்சி
fileimage
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சுற்றுவட்டாரங்களில், டிராக்டர் மூலம் உழவு செய்து விட்டு, வயலிலேயே மறுநாள் உழவு செய்வதற்கு அங்கேயே நிறுத்தி வைத்து விட்டு வருவது வழக்கம். அப்படியாக நிறுத்தி வைக்கப்பட்டு வரும் டிராக்டர்களில் கடந்த சில மாதங்களாக பேட்டரி, டீசல், உதிரி பாகங்கள், டயர்களை மர்ம நபர்கள் திருடி செல்லும் சம்பவம் அரங்கேறி வந்துள்ளது. இது குறித்து டிராக்டர் உரிமையாளர்கள், விவசாயிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், திருவையாறு அருகே வடுகக்குடியை சேர்ந்த தமிழரசன்,54, விவசாயி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வங்கியில் லோன் மூலம் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மகேந்திரா டிராக்டர் ஒன்றை வாங்கி உழவுப்பணிக்கு பயன் படுத்தி வந்துள்ளார். கடந்த 17ம் தேதி வழக்கம் போல, வயல்களில் உழவுப்பணிகளை முடித்து விட்டு, வயல் ஒரத்தில் நிறுத்தி வைத்து வீட்டு, அங்கிருந்த கொட்டகையில் துாங்கி இருந்து மறுநாள் காலை பார்த்த போது, டிராக்டர் காணவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த தமிழரசன், தனது மகன்களிடம் டிராக்டர் குறித்து கேட்டுள்ளார். அவர்களும் டிராக்டரை எடுத்து வரவில்லை என தெரிவித்துள்ளார். அக்கம் பக்கத்தில் தமிழரசன் தேடியுள்ளார். ஆனால் டிராக்டர் கிடைக்கவில்லை. இது குறித்து தமிழரசன் நேற்றுமுன்தினம் மருவூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மருவூர் போலீசார், திருவையாறு சாலைகளில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது டிராக்டர் யாரோ ஒருவர் ஓட்டி செல்வது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் உதவியுடன் தமிழரசன் மற்றும் அவரது மகன்கள் தேடி வருகின்றனர்.