மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல ஆண்டு காலம் சாலையோரத்தில் பூ, பழம், காய்கறி உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டிகளில் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்களை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை கூட்டாக சேர்ந்து எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென கடைகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றி உள்ளனர்.
இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஆகவே, சாலையோர வியாபாரிகளை கணக்கெடுப்பு நடத்தி அடையாள அட்டை வழங்கி 14 பேர் கொண்ட விற்பனைக்குழு அமைக்க வேண்டும். சுப்ரமணியபுரத்தில் நடந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உயர்நீதிமன்ற உத்தரவை மீறுதல், பொது சொத்தை சேதபடுத்துதல், வியாபாரிகளை தாக்கி காயப்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். வியாபாரிகளுக்கு தமிழக அரசுஉரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டத்திற்கு சிபிஎம் பொன்மலை பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், கார்த்திகேயன், லெனின், மணிமாறன், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வி, மாவட்ட தலைவர் கணேசன் மற்றும் ஏராளமான வியாபாரிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.