தஞ்சாவூரில் வியாபாரிகள் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் கீழவாசலில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஏற்கனவே இருந்த மார்க்கெட்டை இருந்து விட்டு, 308 கடைகளுடன் சரபோஜி மார்க்கெட் மாநகராட்சி நிர்வாகம் புதிதாக அமைத்தது. இந்த கடைகளுக்கு கடந்த 2022, செப்டம்பர் மாதத்தில், டெண்டர் முறையில், வியாபாரிகள் அதிக வாடகைக்கு கடைகளை எடுத்தனர். ஆனால், அந்த அளவுக்கு வருவாய் இல்லாததால், கடைகளை நடத்த முடியாத நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டனர்.
இருப்பினும் டெண்டரில் கடையை வாடகைக்கு எடுத்த, சில மாதங்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வேண்டாம் என முறைப்படி திரும்ப ஒப்படைத்து விட்டனர். ஆனால், வியாபாரிகள் செலுத்திய டெபாசிட் தொகை திரும்பத் தரமுடியாது என மாநகராட்சி நிர்வாகம் கூறி விட்டது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு டெண்டர் நடத்தப்பட்டு, குறைந்த வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு, கடைகள் வாடகைக்கு விடப்பட்டது. இதையடுத்து வாடகை வித்தியாசத்தை சரி செய்ய கமிஷனரிடம் வியாபாரிகள் முறையிட்டனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகத் தரப்பில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கூடுதல் வாடகைக்கு ஏலத்தில் எடுத்த வியாபாரிகள் மாத வாடகை செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், வாடகை தொகை நிலுவை வைக்கப்பட்ட கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, கடைகளைப் பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அதிருப்தியடைந்த வியாபாரிகள், அனைத்து வியாபாரிகளுக்கும் ஒரே மாதிரியான குறைந்த வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது; முன்னாள் இருந்த ஆணையர் இருந்த போது, கூடுதல் வாடகை நிர்ணயம் செய்து கடைகளை ஒதுக்கியதால், மூன்று மாதத்தில் நூறு நபர்களுக்கு, மேல் கடை வேண்டாம் என திருப்பி ஒப்படைத்து விட்டனர்.
அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு தெளிவுரை அனுப்பியுள்ளோம். அதற்கான பதில் இன்னும் வரவில்லை. சில நிபந்தனைகளுடன் டெபாசிட் பணம் திருப்பி கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" இவ்வாறு தெரிவித்தனர்.