நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

 போக்குவரத்து மாற்றம்

கோடை சீஸனை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், ஊட்டி - மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழி பாதையாக இன்றுமுதல் மாற்றப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் இருக்கிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி வருகிற 17ம் தேதி முதல் தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் வாகனங்கள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். இதனால் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி நகர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், கோடை சீஸனையொட்டி இன்று முதல் மே மாதம் இறுதிவரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கூடலூரில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பேருந்துகள், வேன் உள்ளிட்ட வாகனங்கள் எச்.பி.எப்., கோல்ப்ஸ் சாலை பகுதியில் நிறுத்தப்படும். அதில் வரும் சுற்றுலா பயணிகள் அரசு சுற்றுப்பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மசினகுடியில் இருந்து கல்லட்டி வழியாக ஊட்டி வரும் இலகு ரக வாகனங்கள் தலைக்குந்தா மட்டம், கோழிப்பண்ணை, புதுமந்து வழியாக ஸ்டீபன் தேவாலயம் வந்தடையும். அதில் தாவரவியல் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் புதுமந்தில் இருந்து வண்டிச்சோலை வழியாக தாவரவியல் பூங்கா வரலாம். கூடலூரில் இருந்து ஊட்டி படகு இல்லம் மற்றும் கர்நாடகா பூங்கா வரும் சுற்றுலா பயணி வாகனங்கள் பிங்கர் போஸ்டில் இருந்து வலதுபுறம் திரும்பி காந்தல் முக்கோணம் வழியாக படகு இல்ல சாலை மற்றும் கர்நாடகா பூங்கா சாலையை அடையலாம். குன்னூரில் இருந்து ஊட்டி வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பஸ்கள், வேன்கள், ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பேருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். கோத்தகிரியில் இருந்து ஊட்டி வரும் அனைத்து வாகனங்களும் கட்டபெட்டு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு குன்னூர் வழியாக வரவேண்டும். பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களும் இன்று, நாளை மற்றும் கோடை விழாவான 1ம்தேதி முதல் 31ம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊட்டி நகருக்குள் வர அனுமதி கிடையாது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாகவும் செல்ல வேண்டும். ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் கமர்சியல் சாலையில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் தங்களது நான்கு சக்கர வாகனத்தை கடை எதிரே நிறுத்தக்கூடாது அதற்கு பதிலாக இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story