போக்குவரத்து நெரிசல்
பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து விடுமுறை நாட்கள் வந்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்த ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். இந்த நிலையில் விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நேற்று மாலை முதல் சென்னைக்கு திரும்பி வரத்தொடங்கினர். கார் மற்றும் வாகனங்களில் ஏராளமானோர் ஒரே நாளில் சென்னை நோக்கி வந்ததால் நேற்று மாலை முதல் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் தொடக்க எல்லையான திருச்சி-சென்னை நெடுஞ்சாலையின் ஆத்தூர் சுங்கச்சாவடியில் சென்னை நோக்கி வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுங்கச்சாவடியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று மெதுவாக சென்றன. ஆத்தூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூல் 90 சதவீதம் பாஸ்டேக் மூலம் வசூலிக்கப்படுகிறது. பாஸ்டாக்கை ஸ்கேன் செய்யும் எந்திரம் வேகமாக செயல்படாததால் மேலும் கூடுதல் காலதாமதம் ஏற்பட்டது. கூடுதலாக இரண்டு சுங்க கட்டணம் வசூல் மையங்கள் திறந்தும் வாகனங்கள் வருகை அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மாலை தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இன்று காலை வரை நீடித்தது. இதேபோல் சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று மாலை 4 மணி முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் சுங்கச்சாவடியில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஏராளமான வாகனங்கள் சென்னை நோக்கி வந்ததால் சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருந்து சென்றன. இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இன்று அதிகாலை வரை வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சென்றன.
பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் 10 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து போலீசார் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். தென்மாவட்டங்களில் இருந்து வரும் விரைவு பஸ்கள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்திற்கு சென்றதால் கோயம்பேடு வரும் பயணிகள் சிரமம் அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து உடமைகளுடன் மாநகர பஸ் நிலையத்திற்கு நீண்ட தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இன்று காலை வெளியூர்களில் இருந்து வந்த பயணிகளால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. எனினும் அங்கிருந்து செல்ல போதிய வசதிகள் இல்லை என்று பயணிகள் குற்றம்சாட்டினர்.