கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் - நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும், விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்து கொடைக்கானலின் இயற்கை அழகை கண்டு ரசித்து செல்கின்றனர், இந்நிலையில் தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானல் பிரதான மலைச்சாலையில் உள்ள பெருமாள்மலை,புலிச்சோலை,வெள்ளி நீர் வீழ்ச்சி அருவி, உகார்த்தேநகர், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை,அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
மேலும் கொடைக்கானல் வருவதற்கு மூன்று வழித்தடங்கள் இருந்தாலும் ,இதில் குறிப்பாக கொடைக்கானல் நகர்ப்பகுதிக்கு வருவதற்கு பெருமாள்மலை சாலை மட்டும் தற்போது வரை போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது, இதனால் இப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுவதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றுசாலை அமைக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்,இதனையடுத்து இன்று நெடுஞ்சாலை துறை கட்டுமானம்,பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திர சேகர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் கோவில்பட்டி முதல் பெருமாள்மலை,கோவில்பட்டி புலியூர் கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையின் இடையினியில் இருந்து பெருமாள்மலை மற்றும் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் இருந்து பெருமாள்மலை உள்ளிட்ட பகுதிகளில் மூன்று வழித்தடங்களில் சாலை அமைப்பது குறித்து வரைப்படம் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, இதில் சாலைகள் அமைப்பது சாத்திய கூறுகள் எவ்வாறு உள்ளது அதே போல சாலை அமைப்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது, இந்த பணிகளுக்கு கோப்புகள் தயார் செய்து,தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெற்று விரைவில் பணிகள் நடைபெறும் என தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மதுரை கண்காணிப்பு பொறியாளர்,திண்டுக்கல் கோட்ட பொறியாளர் உள்ளிட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த சாலை அமைக்கப்பட்டால் பேத்துப்பாறை, பாரதி அண்ணா நகர், அஞ்சு வீடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் பெரிதும் பயன் அடைவதோடு போக்கு வரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.