நமுன சமுத்திரத்தில் போக்குவரத்து நெரிசல் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை!
போக்குவரத்து நெரிசல்
புதுக்கோட்டையில் காரைக்குடி மதுரை செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள நமுன சமுத்திரத்தில் ரயில்வே கேட்டு உள்ளது. திருச்சி ராமேஸ்வரம் ரயில்வே வழித்தடத்தில் அமைந்துள்ளதால் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில், சரக்கு ரயில் என்று தினமும் 15க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கின்றன.
அதேபோல் புதுக்கோட்டையில் இருந்து திருமயம், பொன்னமராவதி, காரைக்குடி, தேவகோட்டை, ராமேஸ்வரம், மதுரை, சிவகங்கை, பரமக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் உட்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் இதன் வழியாக இயக்கப்படுவதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றன.
ரயில் வரும் நேரத்தில் கேட் மூடப்படும் போது இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் சாலையின் வளைவு பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளதால் ஒரே நேரத்தில் வாகனங்கள் கடந்து செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் குறிப்பாக முதியோர், நோயாளிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றன. எனவே இங்கு உயர் மட்ட மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.