வெயிலில் வாடும் போக்குவரத்துக் காவலர்கள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாளுக்கு நாள் மதுரையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மதிய வேளையில் சாலைகளில் வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமக்களுக்கும் வாகனஓட்டிகளுக்கும் மாநகராட்சி மாவட்ட நிர்வாகம் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் நிழற்குடை ஆகிய சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் மதுரை மாநகர காவல் துறை சார்பாக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் சேதுபதி மேல்நிலைப்பள்ளி போக்குவரத்து சந்திப்பில் நான்கு புறமும் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோல் மாநகரின் அனைத்து சந்திப்புகளிலும் வாகன ஓட்டிகளுக்கு நிழற்குடை அமைக்கப்பட்டால் மிகவும் உதவியாக இருக்கும் என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் மதுரை மாநகரில் ஒரு சில சந்திப்புகளில் போக்குவரத்து காவலர்களுக்கு போக்குவரத்து சோதனைசாவடி அமைக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து காவலர்கள் வெயிலில் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மாநகர காவல் துறை போக்குவரத்துக் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது போக்குவரத்து காவலர்களின் கோரிக்கையாக உள்ளது