வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - யானைக்கல் தரைப்பாலம் பகுதியில் போக்குவரத்திற்கு தடை
தரைப்பாலத்தில் செல்ல தடை
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வருசநாடு, வெள்ளிமலை, கொட்டகுடி ஆறு அரசரடி, மூல வைகை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தேனி பெரியகுளத்தில் உள்ள வைகை அணையில் நீரானது முழு கொள்ளவை எட்டியுள்ளது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் வைகை அணையில் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அணையிலிருந்து அதிகப்படியான நீர் திறந்து விடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர் மட்டம் 66 அடியை எட்டிய நிலையில், கரையோரா மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
ஆனால், மாலையில் அணையின் முழு கொள்ளளவான 71 அடியில், நீர்மட்டம் 68.50 அடியை எட்டிதால், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரத்து 169 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை விவசாய தேவைக்காக திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை ஆற்றின் கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகவும் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு வரத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் மதுரை யானைக்கல் தரைப்பாலம் அருகே வெள்ளப்பெருக்கு அதிகரித்த நிலையில், வைகை ஆற்றுக் கரையோரத்தில் மீனாட்சி கல்லூரியில் இருந்து செல்லூருக்கு செல்லக்கூடிய சாலை மற்றும் ஆழ்வார்புரத்திலிருந்து ஆரப்பாளையம் செல்லக்கூடிய சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து காவல்துறையினர் இரும்பு தடுப்புகளை வைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனிடையே வைகையாற்று கரையோரங்களில் பொதுமக்கள் ஆற்றிற்கு செல்லவோ, ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது