குளச்சலில் குப்பை கொட்டவந்த டிம்பர் லாரி அந்தரத்தில் தொங்கியது
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் வழியாக செல்லும் மேற்கு கடற்கரை சாலையோர பகுதிகளில் இரவு வேளைகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டி செல்வது வழக்கம். இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுவதாக புகார் உள்ளது. இந்த நிலையில் நேற்று பட்டப்பகலில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று தனியார் நிலத்தில் குப்பைகளை கொட்ட முயற்சித்தது.
அப்போது அந்த லாரி பாரம் மிகுதியால் அந்தரத்தில் தூக்கி நின்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாகனங்களை மாற்றி பாதையில் திருப்பி விட்டனர். விசாரணையில், குழித்துறை நகராட்சி குப்பைகளை இங்கு கொண்டு வந்ததாக தெரிய வந்தது.
இது தொடர்ந்து போலீசார் அந்தரத்தில் தொங்கிய டிப்பர் லாரியை மீட்டு போக்குவரத்து சீரமைத்தனர். கல்லுக்கூட்டம் பேரூராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட வந்த டிப்பர் லாரிக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, குப்பையை திருப்பி அனுப்பியது. இதனால் மேற்கு கடற்கரை சாலை பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.