ரயில்சாலையில் நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி
போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கருடசேவை உற்சவத்தையொட்டி, சுவாமி வீதியுலா சென்ற சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், தடை விதிக்கப்பட்ட சாலையை ஒட்டியுள்ள பிற தெருக்களில் வழக்கத்தைவிட, வாகன நடமாட்டம் அதிகம் இருந்தது.
இந்நிலையில், ரயில்வே சாலையுடன், பி.எஸ்.கே., தெரு, திருச்சக்கரபுரம் தெரு இணையும் நான்குமுனை சந்திப்பில், நேற்று காலை 11:10 மணியளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை கடந்து வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இடதுபக்கமாக செல்ல வேண்டிய இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை விதியை மீறி வலது பக்கமாக சென்றதால், எதிர்புறத்தில் இருந்து இடதுபக்கம் வந்த வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோல, பாதசாரிகள் நடந்து செல்லக்கூட இயலாமல் நெரிசல் ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த போலீசார், 15 நிமிடம் போராட்டத்திற்குப்பின், நெரிசலை சீரமைத்தனர்.