கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் இதமான காலநிலையினையும், குளிர்ந்த சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் சுற்றுலா பயணிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து காணப்படுவது வழக்கம், இந்நிலையில் ரம்ஜான், தமிழ் புத்தாண்டு விடுமுறையினை தொடர்ந்து கடந்த 3 தினங்களாகவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது.
குறிப்பாக நேற்று கொடைக்கானல் நகரின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள வெள்ளிநீர்வீழ்ச்சி அருவி, புலிச்சோலை அருவி, அருங்காட்சியகம், சிட்டிவியூ, செண்பகனூர், உள்ளிட்ட மலைச்சாலைப்பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர், சுற்றுலாப்பயணிகளின் தொடர் வருகையால் நகரின் முக்கியப்பகுதிகளான மூஞ்சிக்கல், சீனிவாசபுரம், உகார்த்தேநகர் லாஸ்காட்ரோடு, ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது, மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக பல மணி நேரம் காத்திருந்து அணிவகுத்து ஊர்ந்த படி செல்கின்றன.
இதனால் உரிய நேரத்தில் சுற்றுலாதலங்களை காணமுடியாமல் சுற்றுலா பயணிகளும், இதர பணிகளுக்கு செல்ல முடியாமல் உள்ளூர் பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர், மேலும் சுற்றுலா பயணிகள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மலைச்சாலையில் காத்திருப்பதால் உணவு தேனீர் போன்ற அத்தியா வசிய தேவைக்கும் இயற்கை உபாதைகளை கழிக்கவும் அல்லல் பட்டு வருகின்றனர், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகையை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் கூடுதல் போக்கு வரத்து காவலர்களை நியமிக்கவும் மலை சாலையில் மொபைல் டாய்லெட் அமைக்கவும் துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.