போக்குவரத்து விதிமீறல் - 78 பேருந்துகளுக்கு அபராதம்
ஆம்னி பஸ்கள்
ஆங்கில புத்தாண்டையொட்டி ரெயில்கள், பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையொட்டி சேலம் சரகத்துக்குட்பட்ட ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என தொப்பூர், ஓமலூர், மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிறப்பு வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனை கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது.
மொத்தம் 715 ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா?, அதிக பயணிகள் உள்ளார்களா?, சாலை வரி கட்டுப்பட்டுள்ளதா?, உரிமம் பெற்று இயக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறும் போது, புத்தாண்டையொட்டி நடந்த சிறப்பு சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 78 பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் அந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும், விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.