நீலகிரியில் 3 காட்டுமாடுகள் ஒரே நாளில் உயிரிழந்த சோகம்
உயிரிழந்த காட்டு மாடு
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி பகுதியில் காட்டுமாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வப்போது காட்டுமாடுகள் நகர் பகுதியில் உலா வருவது வாடிக்கை. சமயங்களில் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்து விடுகின்றன. தேயிலை தோட்டங்களில் அவ்வப்போது முகாம் இடுவதால் தேயிலை பறிக்கும் பணிகள் பாதிக்கப்படுகிறது.
வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டுமாடுகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்கள் மற்றும் ஊருக்குள் நுழைகின்றன. இந்நிலையில் ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டா வனப்பகுதியில் 3 காட்டுமாடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. வனத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர், கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தார்.
இதுகுறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், "தொட்டபெட்டா வனப்பகுதியில் ஒரு ஆண், இரண்டு பெண் என 3 காட்டுமாடுகள் இறந்து கிடந்தன. ஒரே சமயத்தில் 3 காட்டுமாடுகள் இறந்து கிடந்ததால் விசாரித்து வருகிறோம். இந்தக் காட்டுமாடுகளை மனிதர்களோ, விலங்குகளோ வேட்டையாடியது போன்ற அறிகுறிகள் இல்லை. உடற்கூறாய்வு முடித்து சில உறுப்புகளை கோவையில் உள்ள தடயவியல் ஆய்வகம் மற்றும் சென்னையில் உள்ள கால்நடை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 4 வாரங்களில் இதன் முடிவுகள் வந்த பிறகு இறப்புக்கான காரணம் தெரியவரும், "என்றார். சமீப காலமாக நீலகிரியில் வனவிலங்குகள் இறப்பு சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.