காதல் மனைவியை பெற்றோர் பிரித்த சோகம் -கோவில் முன் இளைஞர் தற்கொலை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய இளைய மகன் பாலமுருகன் (22). ஐடிஐ படித்து விட்டு சிவகாசியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அதே கம்பெனியில் வேலை பார்த்த சிவகாசி அருகே உள்ள நாரணாபுரத்தை சேர்ந்த இளம் பெண்ணும், பாலமுருகனும் காதலித்து வந்தனர். காதலர்கள் இரண்டு பேரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்து காதலர்கள் இருவரும் தீபாவளிக்கு மறுநாள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த நிலையில் பாலமுருகனும் அவருடைய காதலியும் தனியாக கோவிலில் வைத்து திருமணம் செய்து உள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தேடிய போது காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கோவையில் இருப்பதை அறிந்த போலீசார் கடந்த 22ம் தேதி காதலர்களை சிவகாசி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து உள்ளனர்.
இந்த நிலையில் காவல் நிலையத்தில் பெற்றோரை பார்த்த பாலமுருகனின் காதலி பாலமுருகனை விட்டு பிரிந்து பெற்றோருடன் செல்லும் விருப்பம் தெரிவித்ததை அடுத்து அந்த பெண்னை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதனால் மனமுடைந்த பாலமுருகன் நேற்று இரவு ஒத்தையால் கிராமத்தில் உள்ள கன்னி மாரியம்மன் கோவிலில் சாமி சிலைக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் இன்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலில் பாலமுருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புதிதாக திருமணம் ஆன காதல் மனைவியை பிரிந்த சோகத்தில் இளைஞர் கோவிலின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.