கன்னியாகுமரியில் ரயிலை தடம் புரளச் செய்து மீட்பு பணி ஒத்திகை
கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் தற்போது மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நேற்று முன்தினம் 24 வேகன்களில் ஜல்லி கற்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சரக்கு ரயில் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில் நின்றது.
இன்று அதிகாலை 4 மணிக்கு இந்த ரயிலை அங்கிருந்து எடுக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது ரயில் இன்ஜினுக்கு பின்னால் இருந்த இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இந்த சத்தம் கேட்டதும் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வந்தனர்.
முதலில் இது விபத்து என்று தகவல் பரவியது. ஆனால் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த பின்னரே இது ஒத்திகை என்பது தெரிய வந்தது. தென்னக ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் விபத்துக்கள் நடந்தால் எந்த மாதிரியான மீட்பு பணிகள் துரிதமாக நடக்கின்றன என்பதற்காக ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் இன்று கன்னியாகுமரியில் போக்குவரத்து இல்லாத தண்டவாளத்தில் செயற்கையாக விபத்து நிகழ்ச்சி ஒத்திகை பார்க்கப் பட்டதாக அதிகாரிகள் கூறினார்கள். சம்பவ இடத்தில் மீட்பு ரயில் வாகனம் வரவழைக்கப்பட்டு பகல் 12 மணியளவில் தடம் புரண்ட பெட்டிகள் சரி செய்யப்பட்டன