ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்
ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை தடத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.
கன்னியாகுமரி முதல் தலைநகர் சென்னை வரை விரைவு ரயில் போக்குவரத்துக்காக ரெட்டை ரயில் பாதை பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகளில் வாஞ்சி மணியாச்சி முதல் ஆரல்வாய்மொழி வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்து, சோதனை ஓட்டமும் ஏற்கனவே முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து ஆரல்வாய்மொழி முதல் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.
தொடர்ந்து இந்த பாதையில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. ஆரல்வாய் மொழியில் இருந்து காலை 10 மணிக்கு ரயில் இஞ்சின் வெள்ளோட்டம் தொடங்கியது. அங்கிருந்து புறப்பட்ட என்ஜின் ஒழுகினாசேரி பழையாற்றுப்பாலம் வரை இயக்கப்பட்டது. 18 நிமிடங்களில் இந்த தூரத்தை ரயில் இன்ஜின் கடந்து வந்தது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து, விரைவில் ரயில்கள் இயக்கம் நடத்தப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.