பயிற்சி மையம் நீட் முகமை இணைந்து கூட்டுக் களவாணித்தனம்: உ.வாசுகி

பயிற்சி மையம் நீட் முகமை இணைந்து கூட்டுக் களவாணித்தனம்: உ.வாசுகி

தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம் 

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்பாவி மாணவர்களின் உயிர்களை காவு வாங்கும், கிராமப்புற மாணவர்களின் கல்வி சமத்துவ உரிமைகளைப் பறிக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். இந்த ஆண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கையை, தமிழ்நாடு அரசே நடத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து முறையாக விசாரணை செய்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதனொரு பகுதியாக, தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சி.பி.எம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் தலைமை வகித்தார்.

மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் உவாசுகி பேசியதாவது, 2024 இல் நடந்த நீட் தேர்வில் ஏற்பட்டிருக்கக் கூடிய குளறுபடிகள், தில்லுமுல்லுகள் இவற்றைப்பற்றி நியாயமான,

நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்பது ஒன்று, இரண்டாவது தமிழகம் உள்பட எந்தெந்த மாநிலம் நீட் தேர்வில் இருந்து எங்களுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்கிறதோ அந்த மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். குறிப்பாக தமிழகம் ஆரம்பத்திலிருந்து இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.

எனவே தமிழகத்திற்கு முதலில் விலக்கு அளிக்க வேண்டும். மூன்றாவதாக இந்த ஆண்டு முதல், மாநில அரசுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரிகளில் அட்மிஷன் சம்பந்தப்பட்ட விஷயங்களை மாநில அரசே செய்வதற்கான அனுமதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம். 2010ல் பொது நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டபோது பல மாநிலங்கள் அதனை எதிர்த்தன.

அப்போது பொது நுழைவுத் தேர்வு இருந்தால்தான், தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தரமான மருத்துவராக, திறமையுள்ள மருத்துவராக வருவார்கள் என தெரிவித்தார்கள். தற்போது கேள்வித்தாள் வெளியாகி உள்ளது. ரூ. 30 லட்சம் கொடுத்து கேள்வித்தாளை பெற்றால் வெற்றி பெற முடியும் என்ற நிலைமையெல்லாம் வரும்போது, நீங்கள் சொன்ன தகுதி, தரம், திறமை என்னவாயிற்று...?

அவர்கள் சொன்ன தகுதி, தரம், திறமை, இது போன்ற மோசடிகளால் நம்பகத்தன்மை இல்லாமல் போய்விட்டது. ஹரியானாவில் ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் ஆறு பேர் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த முறை மொத்தமாக 66 பேர் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர் என்றால் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்ற முடிவுக்கு நம்மால் வர முடிகிறது. எனவே, இதுகுறித்து வெளிப்படையான உண்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணை ஒன்றிய அரசின் மேற்பார்வையில் நடத்தப்படாமல், உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து, மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். இந்தியக் கல்விக் கொள்கையை கொண்டு வந்த ஒன்றிய அரசு, மாநில அரசுகளிடம் கலந்தாலோசனை செய்யாதது ஏன்... நுழைவுத் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவத்திற்கான இடம் என்றால் +2 பொதுத்தேர்வு எதற்காக...? பிளஸ் டூ பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், நீட் தேர்வில் உரிய மதிப்பெண் பெறவில்லை என்றால், மருத்துவ சீட் கிடைக்காது என்றால் எதற்கு இந்த இரட்டை நிலை...?

ஏற்கனவே முதலமைச்சர் ஆக எம்ஜிஆர் இருந்த போது மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிக்கு பொது நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டு அது பலன் அளிக்காது என பின்னர் கைவிடப்பட்டது. ஒன்றிய அரசு வலிந்து நுழைக்கும் இது போன்ற நுழைவுத் தேர்வுகளை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா... பல லட்சம் செலுத்தி கோச்சிங் சென்டர் என்றால் தான் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. வசதி படைத்தவர்கள் தான் கோச்சிங் சென்டர் செல்ல முடியும் என்ற நிலையில், கிராமப்புற மக்கள், பட்டியல் இன மக்கள், மலைவாழ் மக்கள், ஏழை மக்கள் அங்கு செல்ல முடியாத நிலையில்,

சமமாகபோட்டியிட முடியாத நிலையில், சமூக நீதி மீறப்படுகிறது. பயிற்சி மையத்திற்கும் தேர்வு மையத்திற்கும் ஒரு கூட்டு களவாணித்தனம், இந்த இரண்டு மையத்திற்கும் நீட் முகமைக்கும் ஒரு கூட்டு களவாணி ஒத்துழைப்பு, இவை அனைத்தும் சேர்ந்துதான் இன்றைக்கு நீட் தேர்வில் மோசடிகள் நடைபெற்று வருகின்றன.

இது போன்ற காரணத்தினால் நீட் தேர்வு வேண்டாம் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் முடிவு எடுத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தமிழக அரசு ஏற்கனவே சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கு ஆளுநர் ரவி அனுமதி கொடுக்காமல் முடக்கி வைத்திருக்கிறார்.

நாம் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் மோடி அரசாங்கம் தான் தடைக்கல்லாக உள்ளது. எனவேதான் மோடி அரசாங்கத்தின் கொள்கையை எதிர்க்கும் போராட்டமாகவும், தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் போராட்டமாகவும் இணைத்துத் தான் இன்று நீட் எதிர்ப்பை நாம் பதிவு செய்ய வேண்டி உள்ளது

இதே போல் யு.சி.ஜி., நெட் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என அதனையும் ரத்து செய்து வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமான இந்திய அரசின் கல்வித் துறை அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டாமா. இது எதற்கும் பதில் சொல்லாமல் கிணற்றில் போற்ற கல்லாக அவர் வாய் மூடி மௌனியாக இருக்கலாமா. மோடி பல்வேறு இடங்களில் கல்வித்துறையில் இந்தியா பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது என்று பேசி வருகிறார். நீட்டில் பிரச்சனை, நெட்டில் பிரச்சனை, என்னதான் உங்கள் சீர்திருத்தம்...? உங்களுடைய சீர்திருத்தம் மோசடிகளை தான் செய்யும்,

உங்களுடைய சீர்திருத்தம் தில்லுமுல்லுகளைத் தான் செய்யும். உங்களுடைய சீர்திருத்தம் சமூக நீதி கோட்பாட்டை, கூட்டாட்சி தத்துவத்தை, ஏழைகளை புறந்தள்ளும் என்பதுதான் உண்மை, உங்களுடைய சீர்திருத்தம் தேவையில்லை என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய, சகோதர அமைப்புகள் உடைய நிலை,

எனவே முறையான விசாரணை வேண்டும். தமிழகத்திற்கு வீட்டிலிருந்து விலக்கு வேண்டும் தமிழகத்தில் உள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இந்திய அரசு தலையிடக்கூடாது மாநில அரசே பார்த்துக் கொள்ளும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநகரச் செயலாளர் சண்.ராமநாதன், பகுதிச் செயலாளர் மேத்தா, சதாசிவம், காங்கிரஸ் கட்சி மாவட்ட மாநகரத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன்,

கே.பக்கிரிசாமி, சி.ஜெயபால், பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், என்.சுரேஷ்குமார், எஸ்.தமிழ்ச்செல்வி, கே.அருளரசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள், ஒன்றிய, மாநகரக் குழு நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள், இந்திய மாணவர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story