தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
தஞ்சாவூரில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு நடந்த இரண்டாம் கட்ட மறு பயிற்சி முகாமை, மாவட்ட தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள பயிற்சி மையங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 196 மண்டல அலுவலர்களை கொண்டு இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் பாராளுமன்றத் தேர்தல் பணியினை முன்னிட்டு, பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 272 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்புகள் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 287 வாக்குச்சாவடிகளுக்கான இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்புகள் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் பாராளுமன்றத் தேர்தல் பணியினை முன்னிட்டு திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குச்சாவடிகள், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குச்சாவடிகள், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குச்சாவடிகள், திருவையாறு சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச்சாவடிகள், தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடிகள், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் 287 வாக்குச்சாவடிகள், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 272 வாக்குச்சாவடிகள், பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் 260 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 2,308 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு அலுவலர்களாக பணிபுரிய உள்ள 11,353 அலுவலர்களுக்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள பயிற்சி மையங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 196 மண்டல அலுவலர்களை கொண்டு இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏப்ரல் 19 வாக்குப்பதிவு அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் வாக்குச் சாவடிகளில் பணியாற்றுகிற அலுவலர்கள் குறித்த நேரத்தில் வாக்குச் சாவடிகளில் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், மாதிரி வாக்குப் பதிவினை 90 நிமிடங்களுக்கு முன்பாக காலை 5.30 மணிக்கு வேட்பாளர் முகவர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகளை தவறாமல் பின்பற்றி கவனமுடன் வாக்குப் பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, வட்டாட்சியர்கள் சுகுமார் (பட்டுக்கோட்டை), சுந்தரசெல்வி (ஒரத்தநாடு) மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் கலந்து கொண்டனர்.