தேர்தல் பணி காவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்ஆட்சியர் மருத்துவர் ச.உமா தலைமையில் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு வாக்குப்பதிவு என்று பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ள 692 காவல்துறையினருக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. காவல் பார்வையாளர் உஷா ராதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு 692 வாக்குப்பதிவு மையங்களில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் நாளன்று பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் ஒரு வாக்குப் பதிவு மையத்திற்கு ஒரு காவலர் பணியமர்த்தப்பட உள்ளார்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 8 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 7 காவல் ஆய்வாளர்கள், 692 காவலர்கள் பணியாற்ற உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவின்போது பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுதல், தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.