விவசாயிகளுக்கு பயிற்சி

கங்காதரபுரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தீவனப்புல் மேலாண்மை மற்றும் வளா்ப்பு பயிற்சி நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரம், கங்காதரபுரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தீவனப்புல் மேலாண்மை மற்றும் வளா்ப்பு பயிற்சி நடைபெற்றது.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் மோ.சுரேஷ் வரவேற்றார். சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஜி.சாந்தி பேசுகையில், "கால்நடைகளுக்கு அளிக்கப்படும் உணவு, கால்நடைகளின் ஆரோக்கிய வாழ்வுக்கும், பால் உற்பத்திக்கும் துணையாக இருக்க வேண்டும். கறவை மாடுகளின் தீவனத்தில் அனைத்து ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், வைட்டமின்கள், நுண்ணியிர் எதிர்ப்பிகள், நோய்களிலிருந்து அவற்றை பாதுகாக்கிறது" என்றார். குருவிக்கரம்பை கால்நடை உதவி மருத்துவா் அகிலா அருணாசலம் பேசுகையில்," கால்நடைகளுக்கு தேவையான சத்து மிகுந்த பசுந்தீவனங்களை அளிப்பதால், பால் உற்பத்தியை மென்மேலும் பெருக்கலாம். தவிடு, புண்ணாக்கு போன்றவற்றினை விட, பசுந்தீவனத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரம், கங்காதரபுரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தீவனப்புல் மேலாண்மை மற்றும் வளா்ப்பு பயிற்சி நடைபெற்றது.மேலும், பசுந்தீவனப்பயிர்களை அளிப்பதால் கால்நடைகளுக்கு சுவாசம், கருவுறுதல், கன்று ஈனுதல் போன்றவற்றுக்கு உதவுகின்றன. பசுந்தீவனப் பயிர் வகைகளில் கோ.எப்.எஸ்.29 என்னும் தீவனச்சோளம், ஆப்பிரிக்க நெட்டை வகையைச் சார்ந்த மக்காச்சோளம், புல் வகைகளில் கம்பு நேப்பியா் புல், கினியா புல், கொழுக்கட்டை புல் போன்றவை அடங்கும். தீவனப் பயிறு வகைகளில் வேலி மசால், குதிரை மசால், தட்டைப்பயிறு, அசோலா உதவுகின்றன" என்றார். மேலும் தீவனப்பயிர் வளா்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றி தொழில்நுட்ப உரையாற்றினார். சேதுபாவாசத்திரம் துணை வேளாண்மை அலுவலா் து.சிவசுப்பிரமணியன் பேசுகையில், "தீவனப்புல் வகைகளில் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது. தீவனப்புல் வளா்ப்பில் விளைச்சல் அதிக அளவில் இருக்கும். தீவனப்புல்லை ஒன்றுக்கு மேற்பட்டமுறை அறுவடை செய்து அதிக மகசூல் மற்றும் அதிக லாபம் பெறலாம்" என்று கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலா்கள் ஆ.தமிழழகன், சி.ஜெயக்குமார், தொகுதி உதவி வேளாண்மை அலுவலா் எம்.அனுசியா ராஜ், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலா் ஆர.சுவாதி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story