நாமக்கல் மாவட்டத்தில் பதற்றமாக உள்ள வாக்குச்சாவடிகள்
நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச. உமா மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் ஹர்குன்ஜித்கெளர் முன்னிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியுள்ள 222 நொன்பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தெரிவித்ததாவது, மக்களவை பொதுத் தேர்தல் – 2024 முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பொதுப்பார்வையாளர், காவல் பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர்களை நியமித்தது. 53 வாக்குப்பதிவு மையங்களில் 174 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
எனவே அந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க வங்கி மற்றும் மத்திய அரசு பணியாளர்களை நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க ஏதுவாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள அந்த வாக்குச்சாவடிகளுக்கான அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நுண்பார்வையாளர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்து நேரடியாக பொது பார்வையாளருக்கு தகவல் தெரிவித்திட வேண்டும். நுண்பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களது வாக்குச் சாவடிகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். தேர்தல் தொடர்பான அனைத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் முறையான பதிவேடுகளை பராமரித்து அவற்றை வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு முடிந்தவுடன் பொதுப்பார்வையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு நாளன்று மாதிரி வாக்குப்பதிவு நடத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீர்நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்து தெரிவிக்க வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் தங்களது சரியான அடையாள அட்டை உள்ளதா எனவும், வாக்காளர்கள் வாக்களிக்கும் பொழுது இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்ட 12 அடையாள அட்டைகள் மூலம் வாக்களிக்கின்றனறா எனவும் உறுதி செய்திட வேண்டும். எனவே நியமிக்கப்பட்டுள்ள நுண்பார்வையாளர்கள் அனைவரும் தேர்தல் நேர்மையாகவும் தூய்மையாகவும் நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தெரிவித்தார்.