நாமக்கல் அருகே அங்கக வேளாண்மை – இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி
நாமக்கல் அருகே கீழ்சாத்தம்பூரில் அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி நடைபெற்றது.
நாமக்கல் அருகே கீழ்சாத்தம்பூரில் அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் கீழ்சாத்தம்பூரை சேர்ந்த 40 விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த பயிற்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் வேளாண்மை துணை இயக்குநர் (மத்தியதிட்டம்) பேபிகலா இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், இயற்கை வேளாண் வழி முறைகள், பயிர் சுழற்சி முறைகள், பாரம்பரிய பயிர்களை தேர்வு செய்தல், கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி, விதை நேர்த்தி முறைகள், இயற்கை முறையில் மண்வள மேம்பாட்டு முறைகள். மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், குறித்து பயிற்சியளித்தார். இந்த பயிற்சியில் நாமக்கல் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா “அங்கக வேளாண்மை என்பது இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, உயிரியல் செயல்பாடுகள் அங்கக கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைக் காக்கும் பயிர் வளர்ப்பு முறையாகும். இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையிலான உழவியல், உயிரியல், இயந்திர முறைகளை பின்பற்றுதல் இதன் தனித்தன்மையாகும்”. என பயிற்சியளித்தார். இந்த பயிற்சியில் மோகனூர் வட்டார அங்கக வேளாண்மை சான்று பெற்ற விவசாயி வேலுசாமி சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்டு “அங்கக வேளாண்மை என்பது செயற்கை ஊக்கிகள் உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை முடிந்த அளவில் தவிர்த்து பயிர்சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக உரம் பயன்படுத்துதல் இவற்றின் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் நல்ல மண்வளம் அடைவதாகும்” என இயற்கை / அங்கக வேளாண்மை குறித்து தனது பண்ணை அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பயிற்சியளித்தார். பயிற்சியில் வேளாண்மை அலுவலர் மோகன் பண்ணையில் கிடைக்கக்கூடிய கழிவுகளை கொண்டு, இயற்கை உரம் தயாரிக்கும் முறைகள், மண்புழு உர உற்பத்தி முறைகள், அங்கக வேளாண் முறையில், பூச்சி மற்றும் நோய்கள் கட்டுப்பாடு, பற்றியும் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார்.பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் இரமேஷ்,உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் மாலதி ஆகியோர் வருகைபுரிந்த விவசாயிகளுக்கு நன்றி கூறி. பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story