சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை
மின்கம்பம்
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மேலமையூர் ஊராட்சியில் 1,000த்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செங்கல்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தெருவோரம் மின்கம்பங்கள் அமைத்து, மின் கம்பிகள் வழியாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் தெரு, பவானி நகர், புதிய காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளன.
பல கம்பங்களில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது: இந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என, மின்வாரிய அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், இதுவரை மாற்றவில்லை. பலத்த காற்று வீசும் போது, மின்கம்பம் முறிந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, தெருக்களில் குழந்தைகளை விளையாட கூட விடுவதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மின் கம்பங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள்கூறினர்.