எடப்பாடி நகர மன்ற கூட்டரங்கில் திடீரென உள்ளே புகுந்த திருநங்கையால் பரபரப்பு.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியிலுள்ள நகர்மன்ற கூட்ட அரங்கில் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் பாஷா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை தடுக்கும் வகையிலும், சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி மேம்படுத்துதல் உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருந்தபோது திருநங்கை ஒருவர் திடீரென கூட்ட அரங்கிற்குள் அனுமதி இன்றியும், நகராட்சி ஊழியர்கள் கூட்டம் முடியும் வரை காத்திருக்குமாறு தடுத்தும் கேட்காமல் உள்ளே புகுந்த திருநங்கை நகர்மன்ற தலைவர் பாஷாவிடம் நன்கொடை கொடுக்குமாறு கூறினார். அப்போது கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது திருநங்கையை எதற்காக கூட்டரங்கிற்குள் அனுப்பினீர்கள் என கேட்ட கவுன்சிலர்களிடம் தனி ஒருவராக அந்த திருருங்கை மல்லுக்கட்டி நின்றார்.
பின்னர் கூட்டம் முடிந்த பிறகு நன்கொடை தருவதாக நகர்மன்ற தலைவர் கூறிய பின்னர் அந்த திருநங்கை நகராட்சி அலுவலர்களால் வெளியேற்றப்பட்டார். இதனால் நகர்மன்ற கூட்டரங்கில் சிறிது நேரம் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.