ஆரல்வாய்மொழியில் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய திருநங்கைகள்
கன்னியாகுமரியில் இருந்து நேற்று ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு காலை 6.45 மணிக்கு ஆரல்வாய்மொழி ரெயில் நிலையம் வந்தது. இங்கு ரெயில் நிறுத்தம் கிடையாது என்பதால் நிற்காமல் சென்றது.
இந்த நிலையில் ரெயில் நிலைய அலுவலகத்தை தாண்டி சென்ற போது ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தப்பட்டது. உடனே ரெயிலின் கடைசி பெட்டியில் இருந்த ரெயில்வே அதிகாரி கீழே இறங்கி என்னமோ, ஏதோ என்று முன்பகுதி நோக்கி ஓடினார்.
அப்போது எஸ்-7 பெட்டியில் இருந்து இறங்கிய 2 திருநங்கைகள் நடைமேடை வழியாக தப்பி ஓடினார்கள். விசாரணையில் நாகர்கோவிலில் இருந்து ரெயிலில் ஏறிய திருநங்கைகள் பயணிகளிடம் வலுக்கட்டாயமாக பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். இது பிடிக்காத சில பயணிகள் அவர்களை சத்தம் போட்டனர். இதனால் பயணிகளுக்கும், திருநங்கைகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து பயணிகளிடம் இருந்து தப்பிக்க ரெயிலின் அபாய சங்கிலியை திருநங்கைகள் பிடித்து இழுத்து நிறுத்தியது தெரிய வந்தது. இதனால் ஹவுரா எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் நின்றது. இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.