போக்குவரத்து அலுவலகம் முற்றுகை!

நீலகிரி மாவட்டம் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற ஊட்டியில் வாடகை கார்களுக்கும் ஆட்டோக்களுக்கும் பஞ்சமில்லை. ஆட்டோக்களுக்கு அரசு‌ நிர்ணயித்துள்ள எல்லை அளவை உயர்த்தி தர வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிங்கர்போஸ்ட் மற்றும் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் வாடகை கார் நிறுத்தம் ஏற்படுத்தி தர வேண்டும் என இன்று சுற்றுலா கார் ஓட்டுநர்கள் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜனிடம் மனு அளித்தனர். சுற்றுலா கார் ஓட்டுநர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்ததை அறிந்த ஆட்டோ ஓட்டுநர்கள், வட்டாரப் போக்கு அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வாடகை கார் ஓட்டுநர்கள் சங்க நிர்வாகி குணசேகரன் கூறுகையில், "வாடகை கார்கள் நிறுத்த இடம் இல்லாததால் சிரமமாக உள்ளது.

அதனால் பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இடம் கேட்டு மனு கொடுத்துள்ளோம். இதேபோல் ஆட்டோக்கு நிர்ணயிக்கப்பட்ட தூரத்திற்கு மட்டுமே ஆட்டோக்களை ஓட்ட அனுமதிக்க வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு ஆட்டோக்கள் செல்ல அனுமதிக்க கூடாது என்ற விதிமுறையை கடைபிடிக்க வேண்டும், "என்றார். ஆட்டோ சங்க தலைவர் சண்முகம் கூறுகையில், "ஊட்டியில் ஆட்டோ நிறுத்தும் இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம் செல்ல ஐகோர்ட்டு உத்தரவு உள்ளது.

ஆனால் பொதுவாக ஊட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் என்று கணக்கிடுகின்றனர். எனவே ஆட்டோ நிறுத்தும் இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அனுமதிக்க வேண்டும். எச்.பி.எப்., பகுதியில் வாகன நிறுத்த இடம் கொடுத்துள்ளனர். இதேபோல் தொட்டபெட்டா நால்ரோடு சந்திப்பு, எல்லநல்லி பகுதியிலும் ஆட்டோ நிறுத்த இடம் கொடுக்க வேண்டும். தற்போது சென்னையில் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆட்டோ ஓட்ட அனுமதி வழங்கப்படுகிறது. எனவே சுற்றுலா தளமான நீலகிரியில் 30 கிலோமீட்டர் தூரம் ஆட்டோ ஓட்ட அனுமதி வழங்க வேண்டும்," என்றார்.

Tags

Next Story