தரம் இல்லாத பள்ளி வாகனங்களை நிராகரித்த போக்குவரத்து அலுவலர்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, அரூர் மற்றும் தருமபுரி போக்குவரத்து அலுவலகத்திற்குபட்ட 147 தனியார் பள்ளிகளில் உள்ள 1146 பள்ளி வாகனங்களை அரசு கலை கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். சேலம் மண்டல துணை போக்குவரத்து ஆணையர் பிரபாகரன், முன்னிலையில் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வாகனங்களின் வேக கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஆர்எஸ் கருவி, இருக்கைகள் வசதி, முதலுதவி பெட்டகம், தீயணைப்பு கருவிகள், அவசரக்கால வெளியேற்ற கதவு, சிசிடிவி கேமரா உள்ளிட்ட பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு குறித்து 23 சிறப்பு அம்சங்கள் என முறையாக உள்ளதா எனவும், பள்ளி வாகனங்களில் உள்ள படிக்கட்டுகள் சிறு குழந்தைகள் ஏறுவதற்கு வசதியாக உள்ளதா என மாவட்ட ஆட்சியர் ஆய்வுகள் மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து பள்ளி வாகனங்களை இயக்கக்கூடிய ஓட்டுநர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பள்ளி மாணவர்களை ஏற்றும் பொழுதும் இறக்கும் போதும் மிகவும் கவனமாக கண்காணித்து வாகனங்களை இயக்க வேண்டும் என ஓட்டுனர்களிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், அவரே பள்ளி வாகனங்களை இயக்கி அதில் உள்ள குறைகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்து எடுத்து வரும்படி ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் விதிமுறைகளுக்கு உட்படாத 13 க்கும் மேற்பட்ட முழு தகுதி இல்லாத பள்ளி வாகனங்களை தகுதியற்றதாக நிராகரிக்கப்பட்டு மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தி அனுப்பினார். இந்த ஆய்வின்போது ஆய்வாளர் தரணிதரன், மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.