தேர்தலை புறக்கணிக்க போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டம்?

தேர்தலை புறக்கணிக்க போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டம்?

 பேராவூரணியில் கிளை மேலாளர் நெருக்கடியால் மன அழுத்தம் ஏற்படுவதாகக் கூறி, போக்குவரத்து தொழிலாளர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.   

பேராவூரணியில் கிளை மேலாளர் நெருக்கடியால் மன அழுத்தம் ஏற்படுவதாகக் கூறி, போக்குவரத்து தொழிலாளர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

இடைவிடாத பணிச்சுமை காரணமாக, அரசுப் போக்குவரத்துக் கழக, பேராவூரணி கிளை பணிமனைத் தொழிலாளர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளதாகவும், இதன் காரணமாக தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சேதுசாலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை பணிமனை உள்ளது. இங்கிருந்து தினமும் 11 புறநகர் பேருந்துகளும் மற்றும் 12 நகரப்பேருந்துகளும், வெளியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

இதில், சுமார் 100 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள், இதர பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பேருந்துகள் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் என இரண்டு ஷிப்டுகளாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஓட்டுநர்கள், நடத்துநர்களை, காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை ஒரே ஷிப்ட்டாக பணியாற்றுமாறு கிளை மேலாளர் நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஒரே ஷிப்ட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பெரும் சோர்வுக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது. தற்போது கோடைக் காலம் அதிகரித்துள்ள நிலையில், வாகனத்தை இயக்குபவர்களில் பெரும்பாலோர் 55 வயதை கடந்த நிலையில் சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுடன் இருப்பதால், பேருந்தை இயக்குவதால் பொதுமக்கள், பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும், பழைய பழுதடைந்த பேருந்துகளே, பேராவூரணி பணிமனையில் இயக்கப்படுகிறது" எனவும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இந்தப் பணிமனையில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பெரும்பாலானோர் நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சை, பாபநாசம், ஒரத்தநாடு, அணைக்கரை, கல்லணை போன்ற ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரவு பணி முடித்த பிறகு தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால் பணிமனையிலேயே கிடக்க வேண்டிய சூழல் உள்ளது. அதிகாலையில் புறப்பட்டு வீட்டுக்கு செல்லும் பணியாளர்கள், மீண்டும் மறுநாள் காலை ஷிப்ட் இயக்குவதற்கு, மாலையே ஊரிலிருந்து வீடு திரும்பி மீண்டும் இரவில் பணிமனையில் தங்கும் சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும், அவர்கள் தங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளவும் முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போக்குவரத்து கழக கிளைமேலாளர் மகாலிங்கத்தை சந்தித்து போக்குவரத்துக் தொழிலாளர்கள் தங்கள் குறைகளை முறையிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கிளை மேலாளர் இவற்றிற்கு செவிமடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பணிமனை வாயிலில் பிளக்ஸ் பேனர் வைத்தனர். தகவலறிந்த, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், போக்குவரத்து தொழிலாளர்கள், கிளை மேலாளரை நேரில் அழைத்து பேசியும் உரிய தீர்வு காணப்படவில்லை என்று தெரிகிறது. இது குறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் தரப்பில் கூறுகையில், "புதிய கிளை மேலாளர் மகாலிங்கம் வந்த பிறகு, எதற்கெடுத்தாலும் தொழிலாளர்களுக்கு மெமோ கொடுப்பது, தனக்கு வேண்டாதவர்களை வாட்டி வதைப்பதும் வாடிக்கையாக உள்ளது. தொழிலாளர்களை கொத்தடிமை போல நடத்துகிறார். அ

வர் எதிரில் தொழிலாளிகள் அமர்வதைக்கூட அனுமதிப்பதில்லை. இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறோம். 18 மணி நேரம் வேலை செய்யும் நாங்கள் மனதளவிலும் உடல் அளவிலும் சோர்ந்து போய் விட்டோம். போக்குவரத்துக் கழக கும்பகோணம் நிர்வாகம் இந்த பிரச்சினையை கவனித்து தீர்த்து வைக்காவிட்டால், "தேர்தல் புறக்கணிப்பை கையில் எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை" என பேசத் தொடங்கியுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் புகைச்சல், தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Tags

Next Story