மேலூரில் அரசு பள்ளியில் மரம் விழுந்தது: 16 மாணவர்கள் காயம்
மருத்துவமனை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 9ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள பூவகை மரத்தின் அருகே அமர்ந்து தேர்வுக்கு படித்து வந்த நிலையில், மரம் உறுதி தன்மை இழந்து வேரோடு சாய்ந்து விழுந்ததில், 13 மாணவிகள் மற்றும் 3 மாணவர்கள் உட்பட 16 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டதை தொடர்ந்து காயமடைந்த மாணவ, மாணவிகள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை விபத்து சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் 16 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
16 மாணவர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது மருத்துவ காரணங்களுக்காக அனைத்து மாணவர்களுக்கும் தொடர்ந்து பரிசோதனை கொடுத்து எக்ஸ்ரே ஸ்கேன் உள்ளிட்டவை எடுத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். மரம் சாய்ந்து விழுந்ததில் பள்ளி மாணவ மாணவியர்கள் படித்துக் கொண்டிருந்தபோது மரம் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 16 மாணவ மாணவியர்கள் காயம் அடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது