பட்டுப்போன மரம் வெட்டும் பணி துவக்கம்
பட்டுபோன மரம் வெட்டும் பணி துவக்கம்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் பெரிய அளவிலான மரம் காய்ந்த நிலையில் உள்ளது. இதன் காய்ந்த கிளைகள் எதிரில் உள்ள வீடுகளின் மேல் பரவியது. அருகில் உள்ள நில அளவை தாசில்தார் அலுவலகம் மீதிலும் இதன் கிளைகள் படர்ந்தன. எந்நேரமும் ஒடிந்து விடும் நிலையில் உள்ளது.
இதனை அகற்ற ஆர்.டி.ஒ. வசம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில், நேரில் வந்து ஆர்.டி.ஒ. சுகந்தி ஆய்வு மேற்கொண்டு, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மரத்தை வெட்ட அறிவுறுத்தினார். ஆனால் இந்த மரம் இதுவரை வெட்டப்படாமல் இருந்தது. எந்நேரமும் ஒடிந்து, சாலையில் செல்வோர் மீது விழும் நிலையில் உள்ளதால், அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த பட்டுப்போன மரத்தை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் மகளிரணி மற்றும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அவரது துரித நடவடிக்கையால் நேற்று இந்த மரம் வெட்டும் பணி துவங்கியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் நீங்கி மகிழ்ச்சியடைந்தனர். மக்கள் நீதி மய்யம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.