பழங்குடியின மாணவி கொலை வழக்கு: வாலிபருக்கு 3ஆயுள் தண்டனை

பழங்குடியின மாணவி கொலை வழக்கு: வாலிபருக்கு 3ஆயுள் தண்டனை

தண்டனை விதிக்கப்பட்ட வாலிபர்

ஊட்டியில் பழங்குடி மாணவி கொலை வழக்கில், வாலிபருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த 9ம் வகுப்பு மாணவியை கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் 24ம் தேதியன்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு செல்ல எச்.பி.எப்., பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது பள்ளி மாணவியின் உறவினரான ரஜ்னேஷ் குட்டன், 24 என்ற தோடர் பழங்குடியின வாலிபர், தன்னுடைய காரில் ஏற்றி சென்று வீட்டில் விடுவதாக கூறி,

வனப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான். மேலும் மாணவி இதுகுறித்து வெளியில் கூறி விடுவார் என்று பயந்த ரஜ்னேஸ் குட்டன் தனது காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாணவியின் தலையில் அடித்து உள்ளார்.

அப்போது ஆத்திரம் அடங்காத ரஜ்னேஸ் குட்டன் மாணவியின் கழுத்தில் இருந்த அடையாள அட்டை கயிறு மூலம் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளான். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டுக்கு வராததால் சிறுமியின் தாயாரும், கிராமத்தினரும் மாணவியை தேடி உள்ளனர். அப்போது 9-வது மைல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சிறுமியின் புத்தகப் பை கண்டுபிடிக்கப்பட்டது.

பின்பு வனப்பகுதியில் தேடிய பொது புதர் ஒன்றில் மூச்சு பேச்சு இல்லாமல் சிறுமி மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சிறுமி இறந்ததை உறுதிசெய்து, உடற்கூறாய்வு செய்ய சிறுமியின் உடலை ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி தோடர் பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பைகாரா காவல் ஆய்வாளர் சுசிலா தலைமையிலான போலீஸார் போக்சோ உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ரஜ்னேஸ் குட்டனை கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தின்போது கஞ்சா போதை பொருள் பயன்படுத்தியதால் ரஜ்னேஸ் குட்டன் மூர்கத்தனமாக செயல்பட்டது தெரியவந்தது. ரஜ்னேஸ் குட்டன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது. பள்ளி மாணவியை பாலியல் ரீதியான துன்புறுத்தி கொலை செய்த ரஜ்னேஸ் குட்டனுக்கு மூன்று பிரிவுகளின் கீழ் 3 ஆயுள் தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதால் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிப்பார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.

இதைத்தொடர்ந்து ரஜ்னேஸ் குட்டன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story