அடிப்படை வசதிகளற்ற பழங்குடியின கிராமம் - தேர்தலை புறக்கணிக்க முடிவு
தோட்டமலை சேப்பன்குழி கிராம மக்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆதிவாசி பழங்குடியின கிராமங்கள் உள்ளன இங்கு தோட்டமலை சேப்பன்குழி பகுதியில் 60- க்கும்.மேற்பட்ட குடும்பங்கள் சிறு சிறு குடில்கள் அமைத்து வசித்து வருகின்றனர்.
இங்கு ஆறு கிலோமீட்டர் தூரம் சாலை இருந்த இடம் அடையாளம் தெரியாமல் சென்று ஆண்டுகள் பல உருண்டோடியும் சாலை செப்பனிடபடாததால் நடந்தே இந்த பகுதியை சேர்ந்த ஆதிவாசி பழங்குடியின மக்கள் மருத்துவமனை, பள்ளி கல்லூரி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பேச்சிபாறை குலசேகரம் போன்ற நகர் பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது.
சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் ஆட்டோ கார் உட்பட வாகனங்கள் செல்லாத காரணத்தால் நோய்வாய்படுவோரை ஐந்து கிலோ மீட்டர் தூக்கி கொண்டு நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது.பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் தினமும் ஐந்து கிலோமீட்டர் நடந்தே செல்ல வேண்டி உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது கரடி , பன்றி,யானை உட்பட காட்டு விலங்குகள் தொல்லையால் இவர்கள் வாழை, மரவள்ளி கிழங்கு உட்பட விவசாய நிலங்களை வன உயிரினங்கள் அழித்து வருவதால் விவசாயமும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்
. ரப்பர் விவசாயம் செய்து வந்த இவர்களது ரப்பர் மரங்கள் ஒக்கி புயலின்போது முறிந்த பிறகு மாற்று மரங்கள் நடமுடியாமல் தவித்து வருகின்றனர்.இதனால் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவிக்கும் இவர்களை தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் பல வாக்குறுதிகளை கொடுத்தாலும் தேர்தல் முடிந்த பிறகு கண்டுகொள்வதில்லை என குற்றசாட்டுகளை அடுக்கும் இவர்கள், இந்த பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.